சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தினர் இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கான டெண்டரை எடுத்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையில் இருந்து பட்டாசு விற்பனை தொடங்குகிறது.
இதுகுறித்து சங்கத்தின் செயல் தலைவர் காஜா முகைதீன் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் இன்று மாலை முதல் செயல்படும். தினமும் காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை விற்பனை நடைபெறும்.
இந்த வருடம் பட்டாசு புகையினால் சுற்றுப்புறம் மாசுபடாத வகையில் பசுமை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தீவுத்திடலில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி விலையில் விற்கப்படும். மற்ற இடங்களில் கிடைப்பதை விட குறைவாக கிடைக்கும். அனைத்து வகையான பிராண்ட் பட்டாசுகளும் ஒரே இடத்தில் பெறலாம். கடைசி 5 நாட்கள் தான் விற்பனை மும்முரமாக இருக்கும்.
கடந்த ஆண்டை விட 5 சதவிகிதம் பட்டாசு விலை உயர்ந்துள்ளது. ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடி வரை தீபாவளி பட்டாசு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் வாகனங்களில் வந்து பட்டாசு வாங்கி செல்ல பார்க்கிங் வசதி உள்ளது. பட்டாசு விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் இன்று தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவுத்திடலில் ஒரே இடத்தில் 65 பட்டாசு கடைகள் - தள்ளுபடி விலையில் விற்க திட்டம்